ராகம வைத்தியசாலையில் விசேட கல்லீரல் சிகிச்சை நிலையம் திறப்பு

இலங்கை மக்களுக்கு உயர்தர சுகாதார சேவையை வழங்குவதை உறுதி செய்வதற்காக கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்ட “எம். எச். ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம்” நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த ஜனாதிபதியை , வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட கல்லீரல் சத்திரசிகிச்சையின் மூலம் குணமடைந்த சிறுமியொருவர் வரவேற்றது விசேட அம்சமாகும்.

இலங்கையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் நாள்பட்ட கல்லீரல் நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கல்லீரல் செயலிழப்புக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே பயனுள்ள சிகிச்சையாகும். இந்த சிக்கலான கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சைக்கு விசேட அறிவு மற்றும் விலையுயர்ந்த உபகரணங்கள் அவசியம்.

Advertisement

கல்லீரல் மாற்று சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்வது ஒரு நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பின் வளர்ச்சியின் குறிகாட்டியாகும். பட்டப்பின்படிப்பு பயிற்சி மையமாகவும் வடகொழும்பு கல்லீரல் நோய்களுக்கான மையம் செயற்படுவதோடு கல்லீரல் நோய்களில் உயர்தர ஆராய்ச்சியை நடத்தி இலங்கையில் கல்லீரல் புற்றுநோய் சிகிச்சையின் மிகப்பெரிய தரவுத்தளத்தை பேணுகிறது.

இந்த கல்லீரல் நோய் விசேட சிகிச்சை நிலையத்தை நிர்மாணிப்பதற்காக எம். எச். ஓமார் நிதியம் இரண்டரை பில்லியன் ரூபாய்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.