ரமழான் நோன்பின் போது சாப்பிட்ட 11 பேர் கைது

நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவில் ரமழான் நோன்பின் போது உணவு உண்ட குற்றச்சாட்டில் 11 இஸ்லாமியர்களை அந்த நாட்டின் இஸ்லாமிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கானோவில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வசித்து வருகின்ற நிலையில், அங்கு பொதுவான மதச்சார்பற்ற சட்டத்துடன், இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டமும் அமுல்படுத்தப்படுகிறது.

ஹிஸ்பா என பரவலாக அறியப்படும் இஸ்லாமிய பொலிஸ், ஒவ்வொரு ஆண்டும் ரமழான் காலப்பகுதியின் போது உணவகங்கள் மற்றும் சந்தைகளில் சோதனைகளை மேற்கொள்கிறது.

Advertisement

அவ்வாறே, நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 10 ஆண்களும் ஒரு பெண்ணுமாக நோன்பு கடைபிடிக்க வேண்டிய காலப்பகுதியில் உணவு உண்ட குற்றச்சாட்டில் கைதாகினர்.

எவ்வாறாயினும், வேண்டுமென்றே மீண்டும் உண்ணாவிரதத்தைத் தவறவிட மாட்டோம் என அவர்கள் சத்தியம் செய்த பின்னர் விடுவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் எனவும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்லாமிய பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர்கள் நோன்பு இருக்க வேண்டிய முஸ்லிம்களுக்கு உணவு சமைப்பது உறுதிசெய்யப்படுமானால் அவர்களும் கைதுசெய்யப்படுவார்கள் என நைஜீரியாவின் இஸ்லாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்