யாழில் சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்த சகோதரன்

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை, யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.

பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார்.

இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார்.

அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.