மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் பலி

புத்தளத்தில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி, புத்தளம் தள வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.

புத்தளம், ஐந்தாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த துவான் சலீம் முஹம்மது சஹ்ரான் எனும் 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குறித்த சிறுவன், கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது வீட்டில் குளித்து விட்டு, முடி உலர்த்தி மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே மின்சார தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

இதனையடுத்து, அவர் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (30) குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி, உயிரிழந்த இளைஞனின் சடலம் மீதான மரண விசாரணையை நடத்தி மின்சாரத் தாக்குதலினால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பளித்து சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.

உயிரிழந்த சிறுவன் கடந்த மாதம் நிறைவடைந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.