பிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

தென்னிந்திய திரையுலகில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி யாரும் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர் டேனியல் பாலாஜி.

சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு ​கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற பொலிஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்.

Advertisement

பின்னர் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாக நடித்து அதீத கவனம் ஈர்த்தார்.

தொடர்ந்து பொல்லாதவன் (ரவி), வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, வட சென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

பெரும்பாலும் வில்லனான நடிப்பதுடன் அதற்கு அவரது குரல், மேனரிசம், உடல் மொழியும் பொருத்தமாக இருக்கும்.

இப்படி தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜிக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, உடனடியாக அவர் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கே மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்றத் தீவிர முயற்சிகளை எடுத்த போதிலும் அவர் சிகிச்சை பலனில்லாமல் காலமானர்.

வெறும் 48 வயதான டேனியல் பாலாஜியின் இந்த திடீர் மறைவு திரையுலகினரின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேனியல் பாலாஜியின் உடல் புரசைவாக்கத்தில் வரதம்மல் காலனியில் உள்ள அவருடைய இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டேனியல் பாலாஜி தனது கண்களை தானம் செய்திருந்ததுடன் புரசைவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கே சென்ற மருத்துவர்கள் கண்களை தானம் பெற்றனர்.