நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளுக்கு இராணுவம் வரவழைப்பு!

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மருத்துவர்கள் தவிர்ந்த சுகாதாரத் துறையில் உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியர்களுக்கான சேவைக்கால இடையூறு, வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு எனப்படும் DAT கொடுப்பனவை ரூ. 35,000 இலிருந்து ரூ. 70,000 ஆயிரமாக ரூ. 35,000 இனால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், குறித்த கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுடுக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

சுகாதாரத் துறையில் தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்புக்கு பதில் நடவடிக்கையாக இலங்கை இராணுவம் இன்று (01) நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு தமது படைகளை அனுப்பியுள்ளது.

Advertisement

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் வழிகாட்டலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது பொதுமக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அந்தந்த வைத்தியசாலை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கொழும்பு பொது வைத்தியசாலை, தேசிய கண் வைத்தியசாலை, பல் வைத்தியசாலை கொழும்பு, ஹோமாகம ஆதார வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, மீரிகம ஆதார வைத்தியசாலை, அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலை, குருணாகல் போதனா வைத்தியசாலை, மாரவில ஆதார வைத்தியசாலை, தங்கொடுவ ஆதார வைத்தியசாலை, அங்கொடை வைத்தியசாலை, IDH அங்கொடை, அங்கொடை கிழக்கு வைத்தியசாலை, அத்துருகிரிய ஆதார வைத்தியசாலை, நவகமுவ ஆதார வைத்தியசாலை, நெவில் பெனாண்டோ வைத்தியசாலை, பண்டாரகம ஆதார வைத்தியசாலை, பலாங்கொட ஆதார வைத்தியசாலை, எஹலியகொட ஆதார வைத்தியசாலை, கேகாலை போதனா வைத்தியசாலை, மாத்தறை போதனா வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, உடுகம ஆதார வைத்தியசாலை, மொணராகலை பொது வைத்தியசாலை, அம்பாந்தோட்டை வைத்தியசாலை, தெபரவெவ ஆதார வைத்தியசாலை, தெஹியத்தகண்டிய ஆதார வைத்தியசாலை ஆகியவற்றுக்கு இராணுத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உரிய பாதுகாப்பு படைத் தளபதிகளின் கண்காணிப்பின் கீழ் பல்வேறு மருத்துவமனைகளில் இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையானது முக்கியமான ஆதரவை வழங்குவதையும், சுகாதார சேவைகளின் தடையற்ற செயற்பாட்டை பேணுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அந்த வகையில் அவசரநிலைகள் ஏற்பட்டால் விரைவாக செயற்படுவதற்காக இராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.