தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டம் விரைவில்

தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் சைபர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் பொருளாதார மாநாட்டை ஜூலை மாத இறுதியில் இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Advertisement

இலங்கை சர்ட் நிறுவனத்தின் (Sri Lanka Cert Institute) ஊடாக தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டம் (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதனையடுத்து சைபர் பாதுகாப்பு அதிகார சபையும் விரைவில் நிறுவப்படும்.

அத்தோடு, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, கல்வி அமைச்சின் உதவியுடன் தொழில்நுட்ப வசதிகள் அற்ற 1000 பாடசாலைகளில் 700 பாடசாலைகளுக்கு இணைய வசதிகளைப் பெற்றுக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் இரண்டாம் கட்டமாக பாடசாலைகள் மட்டத்தில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மேலும் கல்வி அமைச்சுடன் இணைந்து தொழில்நுட்ப அறிவைப் பெறாமலிருக்கும் 10,000 பட்டதாரிகளைத் தெரிவுசெய்து அவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் மே மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.” என்று தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.