கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் சிறுவன் பலி

நாவலப்பிட்டி, மொன்டகிரிஸ்டோ பகுதியில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரிக்கெட் போட்டியின் பின்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 14 வயது சிறுவன், 13 வயது சிறுவனை கிரிக்கெட் மட்டையால் தலையில் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி கதிரேசன் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஸ்டன்லி ஸ்டெபிக் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

இந்த இரண்டு மாணவர்களும் கடந்த 23ம் திகதி மற்றொரு குழுவினருடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.ஆனால் திடீரென பெய்த மழையால் அவர்கள் விளையாடுவதை நிறுத்தியுள்ளனர்.

இதன் போது வேறொரு மாணவன் ஸ்டென்லி என்ற சிறுவனின் கிரிக்கெட் மட்டையை தண்ணீரில் மூழ்கடித்துள்ளதுடன், அவர் மேற்படி மாணவனை திட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மற்றைய மாணவன் தனது கிரிக்கெட் மட்டையால் ஸ்டென்லி என்ற சிறுவனின் தலையில் அடித்துள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில், குறித்த சிறுவன் நேற்று (30) உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் தலையில் பலத்த காயம் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

நாவலப்பிட்டி பொலிஸார் சந்தேகத்திற்குரிய சிறுவனை பொலிஸ் காவலில் எடுத்து மே மாதம் 06 ஆம் திகதி வரை வெரவல்வத்தை சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.