இலங்கை மகளிர் அணி நாட்டை வந்தடைந்தது

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் இன்று அதிகாலை 02.58 மணியளவில் தோஹாவில் இருந்து கட்டார் எயார்வேஸ் விமானமான KR-658 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற T20 மற்றும் ODI தொடர்கள் மற்றும் டுபாயில் நடைபெற்ற T20 உலகக் கோப்பைக்கான அனைத்து தகுதிப் போட்டிகளிலும் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னர் இலங்கை மகளிர் அணி மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டி, ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஆகியவற்றில் பங்கேற்கும் என இலங்கை அணியின் தலைவர் சமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மேலும், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தாம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறிய சாமரி அத்தபத்து, ஒவ்வொரு போட்டியையும் நன்கு திட்டமிட்டு எதிர்வரும் உலக இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெறுவோம் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.